மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தொழிலாளி சாவு பொதுமக்கள் சாலை மறியல்

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அந்த பகுதியில் உள்ள மதுக்கடைகளை மாற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-02 22:30 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தெல்லனஅள்ளி ராஜீவ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சேகர்(வயது47). தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது காரிமங்கலம்- திப்பம்பட்டி சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சேகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் திப்பம்பட்டி சாலையில் 3 மதுக்கடைகள் உள்ளதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் மதுக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் தாசில்தார் கலைசெல்வி, பாலக்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுக்கடைகளை மாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் போலீசார், விபத்தில் இறந்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திப்பம்பட்டி சாலையில் இயங்கி வந்த 3 மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சாலை மறியல் காரணமாக அந்தபகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்