விழுப்புரத்தில், ஏலச்சீட்டு நடத்தி 83 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டவர் கைது

விழுப்புரத்தில் ஏலச்சீட்டு நடத்தி 83 பவுன் நகை மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-08-04 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் நகை தொழிலாளி பன்னீர்செல்வம்(வயது 45). இவர் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

விழுப்புரத்தில் நகை பட்டறை நடத்தி வருபவர் முருகன்(51). இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாதாந்திர நகை ஏலச்சீட்டு நடத்தி வந்தார். நான் உள்ளிட்ட 20 பேர் அந்த ஏலச்சீட்டில் சேர்ந்தோம். ஏலச்சீட்டில் சேர்ந்த நாங்கள் அவர்களுக்கு ஏற்றவாறு நகை மற்றும் பணமாக கட்டிவந்தோம். 2 ஆண்டுகள் சீட்டு கட்டினால் நகை மொத்தமாக தருவதாக முருகன் என்னிடம் கூறினார். அதன்படி நான் மாதந்தோறும் 25 கிராம், 20 கிராம் என அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கட்டிவந்தேன்.

2016-ம் ஆண்டு வரை மொத்தம் 83 பவுன் நகை கட்டினேன். 83 பவுன் நகையின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்நிலையில் 2 ஆண்டுகள் கட்டி வந்த நகைகளை கேட்டபோது முருகன், ஏதாவது சாக்குபோக்கு கூறி காலம் கடத்தி வந்தார். பின்னர் அவரது நகைப்பட்டறைக்கு சென்று கேட்டபோது நகைகளை தரமுடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். ஏலச்சீட்டு நடத்தி எனது நகைகளை மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த அனைத்து நகைகளையும் மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, முருகனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், பன்னீர்செல்வத்திடம் நகை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்