மார்த்தாண்டத்தில் மாணவியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது

மார்த்தாண்டத்தில், பி.எச்டி. மாணவியிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்லூரி பேராசிரியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Update: 2019-08-04 23:15 GMT
குழித்துறை,

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (வயது 52). இவர் மதுரை மேலூரில் ஒரு அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வழி காட்டுதலில் மார்த்தாண்டம் அருகே புத்தன்சந்தையை சேர்ந்த விஜூமோன் மனைவி கிளாடிஸ் புளோரா (30) கடந்த 2016-ம் ஆண்டு முதல் பி.எச்டி. படித்து வருகிறார். இதன் இறுதிக்கட்டமாக நேர்காணலுக்கு (வைபா) தேதி குறித்து கொடுக்க ரசல்ராஜ் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு கிளாடிஸ் புளோரா பணம் இல்லை என்று கூறினார். ஆனால், ரசல்ராஜ் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரமாவது உடனே தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. பணம் கொடுக்க விருப்பம் இல்லாத கிளாடிஸ் புளோரா இதுகுறித்து நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கூறினார். போலீசார் பேராசிரியரை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

இதையடுத்து போலீசார், கிளாடிஸ் புளோராவிடம் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்து அனுப்பினர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் ரசல்ராஜை தொடர்பு கொண்டு, முதற்கட்டமாக ரூ. 25 ஆயிரம் தருவதாக கூறினார். அப்போது ரசல்ராஜ் பணத்தை மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சந்திப்பு அருகே கொண்டு தருமாறு கூறினார்.

இதையடுத்து கிளாடிஸ் புளோரா நேற்று பணத்துடன் ரசல்ராஜ் கூறிய இடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ரசல்ராஜ் பணத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து, அவரை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசல்ராஜை கைது செய்தனர்.

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்