ஆரணியில் டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர், செவிலியர் பிரசவம் பார்த்ததில் பெண் ‘திடீர்’ சாவு

ஆரணியில் டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர், செவிலியர் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் திடீரென இறந்து விட்டார். இதனால் குடும்பத்தினர், உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-06 23:15 GMT
ஆரணி,

ஆரணியை அடுத்த இருங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவிழிவேந்தன், தொழிலாளி. இவருடைய மனைவி ஜமுனா (வயது 29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஜமுனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை உடனடியாக மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நேற்று அதிகாலையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. செவிலியர் திவ்யா மற்றும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த ஜமுனாவுக்கு திடீரென ரத்த போக்கு அதிகமானதால் தாயையும் குழந்தையையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜமுனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். அவரது குழந்தை அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஜமுனா இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாமல் செவிலியரும், ஆம்புலன்ஸ் டிரைவரும் பிரசவம் பார்த்ததால் தான் ஜமுனா இறந்ததாக கூறி ஆரணி அரசு மருத்துவமனை முன்பு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஜமுனா இறந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்