விருத்தாசலம் வாலிபர் இறந்த வழக்கில் திருப்பம், “ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொன்றது அம்பலம்” - வாலிபர் கைது

விக்கிரவாண்டி அருகே விருத்தாசலத்தை சேர்ந்த வாலிபர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கொன்றது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-08-06 22:30 GMT
விக்கிரவாண்டி,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அந்தேரிமேடு பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் உமாநாத் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 4-ந் தேதி இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உமாநாத் பயணம் செய்தார். திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தில் உள்ள சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் ரெயில் வந்தபோது, உமாநாத் திடீரென ரெயிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், இதுபற்றி விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும், உமாநாத் அருகில் சந்தேகத்துக்கிடமாக இருந்த நபரை பயணிகள் பிடித்து விழுப்புரம் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் சம்பவம் நடந்த பகுதி செங்கல்பட்டு ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த நபரை விழுப்புரம் போலீசார், செங்கல்பட்டு ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த முத்தரசன் (வயது 35)என தெரியவந்தது. உமாநாத் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஓடும் ரெயிலில் இருந்து உமாநாத் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. அதாவது ரெயில் பயணத்தின்போது உமாநாத்துக்கும், முத்தரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த முத்தரசன், ஓடும் ரெயிலில் இருந்து உமாநாத்தை கீழே தள்ளி விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முத்தரசன் மீது போலீசார், கொலை வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்