சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி மூதாட்டி கொலை, மருமகள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை - கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

கோவையில் சொத்து தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி மூதாட்டியை கொன்ற மருமகள் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-07 22:30 GMT
கோவை,

கோவையை அடுத்த ஒண்டிப்புதூர் இருகூர் பிரிவு போடிநாயக்கர் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி (வயது 67). இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 38). இவருடைய மனைவி பத்மபிரியா (35). ரங்கநாயகி பெயரில் சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டை பத்மபிரியா தனது கணவர் பெயரில் எழுதி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் மாமியார், மருமகள் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ரங்கநாயகி தனியாக வசித்து வந்தார். அவருடைய வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

வேன் டிரைவரான பாலசுப்பிரமணியன் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சபரிமலைக்கு சென்றார். அப்போது ரங்கநாயகி வீட்டிற்கு சென்ற பத்மபிரியா தனது கணவர் பெயருக்கு வீட்டை எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டார். அதை அவர் ஏற்க மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து பத்மபிரியா, தனது மாமியார் செத்தால்தான் வீட்டை கைப்பற்ற முடியும் என்று கருதினார். இதற்காக கூலிப்படையை ஏவி ரங்கநாயகியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி திருச்சி சோமரசன் பேட்டையை சேர்ந்த கருணாகரன் (30) என்பவர் தலைமையில் கூலிப்படையினர் கோவை வந்தனர்.

பின்னர் அவர்கள் பத்மபிரியா திட்டமிட்டு கொடுத்தபடி ரங்கநாயகி வீட்டிற்கு சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் எதுவுமே தெரியாத போல் இருந்த பத்மபிரியா, தனது கணவரின் உறவினர்களுக்கு போன் செய்து, மாமியாரின் வீடு நீண்டநேரமாக பூட்டிக்கிடக்கிறது என்று தகவல் கூறினார்.

உடனே அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரங்கநாயகி பிணமாக கிடந்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பத்மபிரியாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பத்மபிரியாவிடம் துருவி, துருவி விசாரணை செய்தனர். இதில் சொத்து தகராறு காரணமாக கூலிப்படையை ஏவி தனது மாமியாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் பத்மபிரியா, கூலிப்படையை சேர்ந்த கருணாகரன், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த மகேந்திரன் (37), சேகர் (37), ராஜேந்திரன் (39), நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சந்திரகுமார் (32), திருச்சி கல்லாமேடு கணேசன் (40), புதுக்கோட்டை வடக்கலூரை சேர்ந்த பழனிசாமி (39) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

அவர்கள் 8 பேர் மீது கொலை செய்தல், கூட்டு சதி, அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பத்மபிரியா, கருணாகரன், மகேந்திரன், சேகர், ராஜேந்திரன், சந்திரகுமார் ஆகிய 6 பேருக்கு கொலை செய்தல் பிரிவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கூட்டுசதி பிரிவுக்கு மற்றொரு ஆயுள் தண்டனையும், அத்துமீறி உள்ளே நுழைதல் பிரிவுக்கு இன்னொரு ஆயுள் தண்டனையும் ரூ.3,500 அபராதமும் விதித்தது டன் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கணேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்தும் நீதிபதி ராதிகா பரபரப்பு தீர்ப்பளித்தார்.

மேலும் பழனிசாமி மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பத்மபிரியா உள்பட 7 பேரையும் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆர்.சரோஜினி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்