திருவள்ளூர் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கில் கிளீனருக்கு ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

திருவள்ளூர் அருகே லாரி டிரைவரை கொன்று உடலை எரித்த வழக்கில் கிளீனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-07 23:30 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள சென்னீர்குப்பத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு கடந்த 2018–ம் ஆண்டு மார்ச் 24–ந் தேதி கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவரான ரவீந்திர நடேகர் (38) என்பவர் அந்த லாரியில் பொருட்களை கொண்டு செல்வதற்காக நிறுவனத்துக்குள் வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் பண்டரிகிரி (35) என்பவர் கிளீனராக உடன் வந்தார். அப்போது கிளீனரான சந்தோஷ் பண்டரிகிரி லாரி டிரைவரிடம் தான் ஊருக்கு செல்ல செலவுக்கு பணம் தருமாறு கேட்டார். அதற்கு லாரி டிரைவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை. பின்னர் தருவதாக கூறினார்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் பண்டரிகிரி, லாரி டிரைவரான ரவீந்திர நடேகரின் தலையில் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். ரவீந்திர நடேகர் இறந்ததை அறிந்த கிளீனர் சந்தோஷ் பண்டரிகிரி அங்கிருந்த போர்வையை எடுத்து அவரது உடலில் போட்டு தீவைத்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்தனர். அவர்களை தள்ளிவிட்டு சந்தோஷ் பண்டரிகிரி தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் காவலாளி முனியப்பன் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் பண்டரிகிரியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக வி.ஆர்.ராம்குமார் வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி செல்வநாதன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தோஷ் பண்டரிகிரிக்கு ஆயுள்தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டணை அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்