நீலகிரி, ஊட்டி பகுதிகளில் கனமழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு - நீர்மட்டம் 68.05 அடியாக உயர்வு

நீலகிரி, ஊட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 68.05 அடியாக உள்ளது.

Update: 2019-08-07 22:45 GMT
பவானிசாகர்,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பவானி ஆறு, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. தற்போது நீலகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியது. இதன்காரணமாக அணையில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது. அதனால் பவானி ஆறு மற்றும் மோயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 7 ஆயிரத்து 427 கனஅடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 63.31 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் நீர்வரத்து அதிரடியாக அதிகரித்து வினாடிக்கு 17 ஆயிரத்து 705 கன அடிநீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 68.05 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விவசாயிகள், அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் பாசனத்துக்காக கீழ்பவானி மற்றும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்