தடையை மீறி விற்பனை செய்ய லாரிகளில் கடத்தல், 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனை செய்வதற்காக லாரிகளில் கடத்தி வரப்பட்ட 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-07 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதை தடுக்க, அதிகாரிகளை கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலசந்திரன் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு சந்தேகப்படும் வகையில் தனியார் பார்சல் நிறுவனத்துக்கு வந்த 2 லாரிகளை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதர பொருட்களுடன் சேர்த்து வைத்து லாரியில் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த 2 லாரிகளிலும் சுமார் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

இதைத் தொடர்ந்து 2 லாரிகளில் இருந்த 1½ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்த 2 லாரி டிரைவர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை லாரிகளில் கடத்தி வந்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், லாரி உள்ளிட்ட வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வது அடிக்கடி நடக்கிறது. இதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது போக்குவரத்துத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட உள்ளது, என்றனர். 

மேலும் செய்திகள்