குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2019-08-07 23:15 GMT
தென்காசி, 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு குற்றாலத்தில் சீசன் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாட்கள் மட்டும் சீசன் நன்றாக இருந்தது. அதன்பிறகு சாரல் மழை இல்லாமல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதன் காரணமாக குற்றாலத்தில் சீசன் ‘டல்’ அடித்தது.

இடையில் இரண்டு நாட்கள் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து வெயில் அடித்ததால், அருவிகளில் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. இருந்தபோதும், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலையில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்தது. வெயிலே இல்லை. நேற்று மதியம் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதேபோன்று செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. இதேபோல் பழைய குற்றாலம் அருவியிலும் தண்ணீர் அதிகமாக கொட்டியது. ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராக இருந்தது. இதனால் அருவிகளில் கூட்ட நெரிசலின்றி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

மேலும் செய்திகள்