கழிப்பறையை சீரமைக்கக்கோரி அரசு மகளிர் கலை கல்லூரியை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை

கழிப்பறையை சீரமைக்கக்கோரி புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

Update: 2019-08-08 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என மாணவிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறை முற்றிலும் சேதமடைந்து உள்ளதால், அதை பயன்படுத்த முடியாமல் மாணவிகள் தவித்து வந்தனர். மேலும் மாணவிகள் வேறுவழியின்றி கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தனர். கல்லூரி வளாகத்தில் உள்ள நாப்கின் எரியூட்டும் எந்திரமும் பழுதடைந்து உள்ளதால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

கடந்த கஜா புயலின் போது கல்லூரி வளாகத்தின் சுற்றுச்சுவர் பல இடங்களில் இடிந்து உள்ளது. இதை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் மறைந்திருந்து, மாணவிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கும்போது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், அந்த மர்மநபரை பிடித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை.

இந்த சம்பவத்தை கண்டித்தும், மாணவிகளை செல்போனில் படமெடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும், பழுதடைந்து உள்ள கழிப்பறையை உடனடியாக சீரமைக்க வேண்டும், நாப்கின் எரியூட்டும் எந்திரத்தை உடனடியாக பழுதுநீக்கி மாணவிகள் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை தாசில்தார் பரணி, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூர்விகா, பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அடுத்த 10 நாட்களுக்குள் மாணவிகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறையை சீரமைப்பு செய்வது, பழுதான நாப்கின் எந்திரத்தை சரிசெய்வது, மேலும், புதிய எந்திரம் ஒன்றையும் வாங்குவது, இடிந்த சுற்றுச்சுவரை கட்டித்தருவது என அதிகாரிகள் உறுதியளித்தனர். தொடர்ந்து நகராட்சி பணியாளர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து முட்செடிகளை அகற்றியும், கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்