ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் குவிந்த மண்ணை அகற்ற கோரிக்கை

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையோரம் காணப்படும் மண் குவியலை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-08-09 22:15 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் நகரில் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி அச்சுந்தன்வயல் பகுதி முதல் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கலை சாலை சந்திப்பு வரை சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ராமநாதபுரம் கிழக்கு பகுதியில் மின்வாரிய அலுவலகம் முதல் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை வரையிலும் பெரும்பாலும் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு சாலை அமைக்கும் பணிக்காக சாலையோரங்களில் தோண்டப்பட்ட மண்ணை ஒரு சில இடங்களில் அங்காங்கே குவித்து வைத்துள்ளனர்.

இதனால் சாலையை விட அதன் இருபுறங்களிலும் மண் குவியல் அதிக அளவில் உள்ளது. மேலும் சாலையிலும் பரவிப்போய் கிடக்கிறது. மேலும் வணிக வளாகங்களுக்கு முன்பாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மணல் போட்டுள்ளதால் சாலையானது பள்ளமாக காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் சாலையோரத்தில் மேடாக இருப்பதால் வாகனங்களை சாலையோரத்திலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சாலை அகலப்படுத்தியும் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு இருந்து வருகிறது. குறிப்பாக குமரையாகோவில், பாரதிநகர், டி-பிளாக் போன்ற பகுதிகளில் மண்ணானது சாலையை மூடும் நிலை இருந்து வருகிறது.

எனவே சாலையோரத்தில் நிறைந்துள்ள மண் குவியலை முற்றிலுமாக அகற்றி மழைநீர் சாலையில் தேங்காமல் வழிந்தோடும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடைகளுக்கு முன்பாக சாலையை காட்டிலும் உயரமாக மணல் கொட்டப்படுவதை தடுக்கவும் வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்