தஞ்சை, சேதுபாவாசத்திரத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தஞ்சை, சேதுபாவாசத்திரத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

Update: 2019-08-09 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொரட்டூரை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கொரட்டூரில் உள்ள நீலகண்டனின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட குழுவினர் சோதனை நடத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிகிறது.

இதேபோல் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கரூப்ஸ் நகரில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு சில ஆவணங்களை எடுத்துச்சென்றதாக தெரிகிறது. இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மதுவிலக்கு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது நடந்ற சோதனையில் அவரிடம் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் அடிப்படையிலேயே அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

மேலும் செய்திகள்