தனியார் பஸ்-கார் மோதல்: பெண் அதிகாரி உள்பட 10 பேர் காயம்

தஞ்சை அருகே தனியார் பஸ் மீது கார் மோதியது. இதில் அரசு பெண் அதிகாரி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான காரில் மோதாமல் இருக்க டிரைவர் திருப்பிய போது அரசு பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது.

Update: 2019-08-11 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மனைவி ஹேமமாலினி. இவர் தஞ்சையில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று இளங்கோவன் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தஞ்சையை அடுத்த வயலூர் அருகே சென்ற போது முன்னால் தஞ்சையில் இருந்து இளங்கார்குடிக்கு அரசு டவுன்பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கார் முந்தி செல்ல முயன்ற போது எதிரே சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ஹேமமாலினி, அவருடைய மகளுக்கும் காயம் ஏற்பட்டது. அப்போது அரசு டவுன்பஸ்சை ஓட்டி வந்த ஆலங்குடியை சேர்ந்த டிரைவர் புண்ணியமூர்த்தி பஸ்சை விபத்துக்குள்ளான காரில் மோதாமல் இருக்க திருப்பினார்.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வாய்க்காலில் பஸ் கவிழ்ந்தது. காரில் ஏர்பலூன் இருந்தால் காரை ஓட்டி வந்த இளங்கோவன் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதில் அரசு பஸ் மற்றும் காரில் சென்ற 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் தஞ்சை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்