சோழவந்தான் அருகே ரவுடியை கொன்று எரித்த வழக்கில் 3 பேர் சிக்கினர்

சோழவந்தான் அருகே ரவுடியை கொன்று எரித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-12 23:00 GMT
சோழவந்தான்,

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள அய்யம்பட்டி கிராமத்தின் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு ஓடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்தும் விசாரித்தனர்.

இதற்கிடையே, போலீசார் அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் காயங்களுடன் அங்கு வந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மலை அடிவாரத்தில் எரிந்த நிலையில் கிடந்தது பழனி முல்லைநகரைச் சேர்ந்த ரவுடி சதீஷ்குமார் (வயது 24) என்பதும், அவரை அய்யம்பட்டியைச் சேர்ந்த உமாசங்கர் உள்ளிட்ட சிலர் கொலைசெய்து உடலை எரித்து விட்டதாகவும் போலீசில் சதீஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட தன்னை அந்த கும்பல் தாக்கியதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த நரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(20), சூரியராஜ்(20), ராமு ( 19) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அய்யம்பட்டியில் நடந்த கொலை சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அய்யம்பட்டியை சேர்ந்த உமாசங்கர் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் மற்றும் உமாசங்கர் ஆகியோர் கூட்டாளிகள் என்பதும், சம்பவத்தன்று மது அருந்தும்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்