விழுப்புரம் அருகே, தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் - தனியார் நிறுவன ஊழியர் சாவு

விழுப்புரம் அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய விருத்தாசலத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.

Update: 2019-08-12 23:00 GMT
விழுப்புரம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் அப்துல்அஜீத் மகன் சதாம்உசேன் (வயது 26). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் தனது சொந்த ஊரில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது நண்பரான விருத்தாசலத்தை சேர்ந்த அருண்குமாருடன் (27) ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று காலை சென்னையில் இருந்து விருத்தாசலத்திற்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை சதாம்உசேன் ஓட்டிச்சென்றார்.

இவர்கள் விழுப்புரம் அருகே பிடாகம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதாம்உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் அருண்குமார் காயமடைந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்