சென்னிமலை அருகே பயங்கரம்; கைகளை கட்டிப்போட்டு அரசு பஸ் கண்டக்டர் படுகொலை

சென்னிமலை அருகே கைகளை கட்டிப்போட்டு அரசு பஸ் கண்டக்டர் படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-08-14 00:15 GMT
சென்னிமலை,

சென்னிமலை அருகே உள்ள காளிக்காவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி முத்துலட்சுமி (55). இவர்களுடைய மகள் கோகிலவாணி (30).

கோகிலவாணி திருமணம் ஆகி சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பழனிச்சாமியும், முத்துலட்சுமியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சென்னிமலை அருகே உள்ள 1010 நெசவாளர் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழனிச்சாமி குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பழனிச்சாமியை வெளியூருக்கு அழைத்து செல்ல அந்த பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் ஆட்டோவுடன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் வீட்டின் பின் வாசலுக்கு சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் பின்வாசல் திறந்து கிடந்ததுடன், பழனிச்சாமியின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவருடைய வாய் ஒரு துண்டால் இறுக்க கட்டப்பட்டிருந்ததையும் கண்டார். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. உடனே இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் ஆறுச்சாமி தெரிவித்தார். மேலும் இதுபற்றி சென்னிமலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘மர்ம நபர்கள், பழனிச்சாமியின் வீட்டின் பின்புற வாசல் வழியாக நுழைந்ததுடன், அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவருடைய வாயை துண்டால் இறுக்கி கட்டி உள்ளனர். பின்னர் அவருடைய கைகளையும் கயிற்றால் கட்டி தாக்கி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்து உள்ளார் என தெரிய வந்தது. பீரோ திறந்து கிடந்ததாலும், அவர் அந்த வீட்டில் தனியாக இருந்து வந்ததாலும் நகை மற்றும் பணம் எதுவும் கொள்ளை அடிக்கப்பட்டதா? என்ற விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. மேலும் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடிக்க வைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள ரவுண்டான வரை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கே வந்து விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், நகைக்காக பழனிச்சாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்