விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து; தொழிலாளி உடல் சிதறி பலி

விருதுநகர் அருகே நேற்று காலையில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியானார். 4 அறைகள் தரைமட்டமாகின.

Update: 2019-08-13 23:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள முத்தலாபுரத்தில், முண்டலாபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்றுள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கமல் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

நேற்று காலை 6 மணி அளவில் பட்டாசு மற்றும் மணிமருந்து இருந்த அறைக்கு 5 தொழிலாளர்கள் மட்டும் வேலைக்கு வந்துள்ளனர். மற்ற தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்த நிலையில் அந்த அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தொழிலாளர்களில் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் அறைக்குள் சிக்கி கொண்டார். வெடி விபத்தில் பட்டாசு இருந்த அறையும், அதனையொட்டி இருந்த 3 அறைகளும் இடிந்து தரைமட்டம் ஆனது.

வெடி விபத்து ஏற்பட்ட அறைக்குள் சிக்கியவர், மத்திய சேனையை சேர்ந்த மாயழகு (வயது 45) என்று தெரியவந்தது. அவர் என்னஆனார் என்று தெரியாத நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு சிவகாசி, விருதுநகரில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றினர். அவர் உடல் சிதறி பலியானது தெரியவந்தது.

இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விதிமுறைப்படி பட்டாசு தயாரிப்புக்கான மணிமருந்தை இருப்பு வைத்துவிட்டு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ள நிலையிலும், இருப்பு வைக்கப்பட்டு இருந்த மணிமருந்தாலேயே வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்