அரிவாளால் தாக்கிய முகமூடி கும்பலிடம் இருந்து எஜமானர்களை காப்பாற்றிவிட்டு உயிர்துறந்த நாய்

அரிவாளால் தாக்கிய முகமூடி கும்பலிடம் இருந்து எஜமானர்களை காப்பாற்றிய நாய் கத்திக்குத்து காயத்துடன் உயிரிழந்தது. அந்த நாயின் விசுவாசம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2019-08-13 22:15 GMT
மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் அசோக்கின் நண்பர்கள் 8 பேர் முகமூடி அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் முத்துக்குமாரை தேடி அவர் வேலை பார்க்கும் அப்பள கம்பெனிக்கு சென்றனர். அங்கு கம்பெனி உரிமையாளர் செந்திலிடம் தாங்கள் தேடி வந்த நபரை கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த கும்பல் ஆத்திரம் அடைந்து செந்திலை அரிவாளால் வெட்டியது. இந்த சத்தம் கேட்டு அவருடைய மனைவி அங்கு பதறியபடி ஓடி வந்து பார்த்தார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் தாக்கியது.

முகமூடி அணிந்து வந்த நபர்களால், தனது எஜமானர்களான செந்தில் மற்றும் அவருடைய மனைவி தாக்கப்படுவதை கண்டு, அவர்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய் ஓடிவந்தது. முகமூடி கொள்ளையர்களை நோக்கி குரைத்தது. மேலும் அவர்கள் மீது பாய்ந்து, தங்கள் எஜமானர்களை காப்பாற்ற முயன்றது.

ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அந்த நாயை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அந்த நாய் பரிதாபமாக செத்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்த செந்தில், அவருடைய மனைவி ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய்(வயது 22), ஹரி (19), பிரவீன்பாலா(18), சிவா(19), ஜாகீர்உசேன்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேரை கைது செய்தனர். தப்பிச் சென்ற விக்னேஷ் என்பவரை தேடி வருகிறார்கள்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து, அதில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தங்கள் எஜமானர்களை முகமூடி கும்பலிடம் இருந்து காப்பாற்றிவிட்டு, கத்திக்குத்து காயத்துடன் உயிர்துறந்த நாயின் விசுவாசம் குறித்து அப்பகுதி மக்கள் பரிதாபத்துடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்