பால்கரில் தொடரும் நிலநடுக்கம்; மக்கள் பீதி : ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது

பால்கரில் மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. தொடரும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது.

Update: 2019-08-13 23:45 GMT
வசாய், 

பால்கர் மாவட்டத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலநடுக்கம் அச்சுறுத்தி வருகிறது. சீரான இடைவெளியில் இந்த நிலநடுக்கம் தகானு மற்றும் தலசாரி தாலுகா பகுதிகளில் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பூகம்பம் ஏற்பட்டு விடுமோ என்ற பீதியுடன் நாட்களை கழித்து வருகின்றனர்.

பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஒரே நாளில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஒரு குழந்தை சுவரில் மோதி பலியானது. கடந்த மாதம் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்தார்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை 5.38 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே பலமுறை உணரப்பட்ட தகானு தாலுகாவில் உள்ள துண்டல்வாடி கிராமத்தில் தான் மீண்டும் இந்த நிலநடுக்கம் உண்டானது.

அப்போது, கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. மிரட்டும் நிலநடுக்கத்தால் பால்கர் பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்