மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மூங்கில்துறைப்பட்டு அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-13 22:30 GMT
மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூரை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி லலிதா (வயது 64). இவர்களுடைய மகன் தினகரன். இவர் திருவண்ணாமலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் திருவண்ணாமலையிலேயே தங்கியுள்ளார். பாண்டுரங்கன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், கடுவனூரில் உள்ள வீட்டில் லலிதா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று லலிதா, தனது மகனை பார்ப்பதற்காக திருவண்ணாமலை சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனே லலிதாவுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லலிதா பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த 3 வெள்ளி குத்து விளக்குகள் ஆகியவற்றை காணவில்லை.

இதற்கிடையே அங்கு வந்த சங்கராபுரம் போலீசார், வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் லலிதா வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம், 10 பவுன் நகைகள் மற்றும் குத்துவிளக்குகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்