வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சுதேசி எழுச்சி பயணம்

வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லரை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து திருச்சிக்கு சுதேசி எழுச்சி பயணம் புறப்பட்டது. அந்த பயணத்துக்கான தொடக்க விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-08-14 22:00 GMT
கன்னியாகுமரி,

சில்லரை வணிகத்தை பாதுகாக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டையில் சுதேசி பிரகடனம் நிகழ்ச்சி நடக்கிறது.

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்குகிறார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு சுதேசி பிரகடனம் எடுத்துக் கொள்கின்றனர்.

எழுச்சி பயணம்

இதற்காக தமிழகத்தின் 25 முக்கிய நகரங்களில் இருந்து வணிகர் சங்கங்களின் பேரவையினர் வாகனங்கள் மூலம் சுதேசி எழுச்சி பயணமாக திருச்சிக்கு செல்கின்றனர். திருச்சிக்கு செல்லும் எழுச்சி பயண தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நேற்று நடந்தது.

பேரணி தொடக்க விழாவுக்கு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் எல்.எம்.டேவிட்சன் தலைமை தாங்கினார். செயலாளர் சி.நாராயணராஜா, பொருளாளர் ஜே.பி.ஜேம்ஸ் மார்ஷல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க தலைவர் பா.தம்பித்தங்கம் கொடி அசைத்து சுதேசி பயணத்தை தொடங்கி வைத்தார்.

திரளானவர்கள் பங்கேற்பு

தொடக்க விழாவில் மாநில துணை தலைவர் ஜார்ஜ், வியாபாரிகள் சுரேஷ், பி.பகவதியப்பன், பாலு, நாராயணன், ஜாண்சன், பாண்டி மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

களியக்காவிளை

இதேபோல் களியக்காவிளையில் இருந்து திருச்சிக்கு ‘சுதேசி எழுச்சி பயணம்‘ புறப்பட்டு சென்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டதலைவர் டேவிசன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஜார்ஜ் முன்னிலை வசித்தார். இதில் வியாபாரிகள் சங்கத்தினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்