வெடி வைத்து மீன் பிடித்தால் படகின் உரிமம் ரத்து; அரசின் சலுகைகளை பறிக்கவும் மீன்வளத்துறை முடிவு

கடலில் தடையை மீறி வெடி வெடித்து மீன் பிடித்தால் சம்பந்தப்பட்ட படகின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்த படகில் செல்லும் மீனவர்களுக்கான அரசின் சலுகைகளையும் பறிக்க மீன்வளத்துறை முடிவு செய்துள்ளது.

Update: 2019-08-14 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் சட்ட விரோதமாக வெடி வைத்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தொண்டி பகுதியில் மீனவர் அல்லாத சிலர் இந்த செயலில் ஈடுபட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. மீனவர்களின் படகுகளை வாங்கிச்சென்று சட்ட விரோதமாக வெடி வைத்து மீன்பிடிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பருவ காலத்தில் கூட்டம், கூட்டமாக வரும் மீன்களை பாறைகளை உடைக்க பயன்படும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்து கொத்துக்கொத்தாக பிடித்து செல்கின்றனர். இனப்பெருக்கத்திற்காக கரையை நோக்கி கூட்டமாக வரும் மத்தி மீன்கள் போன்றவற்றை இந்த முறையில் மீனவர்கள் பிடித்து விற்பனை செய்கின்றனர்.

கடலில் போடப்படும் வெடி வெடித்ததும் 8 முதல் 10 மீட்டர் சுற்றளவில் உள்ள மீன்கள் மயங்கி மிதக்கும். இந்த மீன்களை உடனுக்குடன் கைகூண்டு வலைகளை பயன்படுத்தி அள்ளி வந்து விற்பனை செய்கின்றனர். குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் மீன்களை பிடிக்காவிட்டால் அவை மயக்கம் தெளிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி சென்று விடும். இதனால் உடனுக்குடன் மீன்களை அள்ளிவிடுகின்றனர்.

தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தின்படி இந்த முறையில் மீன் பிடிப்பது கடும் குற்றமாகும். இந்த மீன்கள் விஷமற்றவையாக இருந்தாலும் இம்முறையில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் இந்த முறையில் யாரும் மீன்பிடிப்பது இல்லை. தொண்டி பகுதியில் மட்டுமே இந்த முறையில் சட்ட விரோதமாக ஒரு சிலர் மீன் பிடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட, இந்த முறையில் மீன்பிடித்த படகு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வெடி வைத்து மீன் பிடிப்பில் ஈடுபடும் படகின் உரிமையாளர்களுக்கு அவர்களின் மீன்பிடி அளவில் 5 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும். மறு முறையும் இதே தவறை செய்தால் இரு மடங்காக அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும். 3-வது முறையாக இந்த தவறை செய்தால் படகின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இனிவரும் காலங்களில் படகின் உரிமையாளர்கள் மீது மட்டுமல்லாமல் படகில் சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து அரசின் சலுகைகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல விசைப்படகுகள் சட்ட விதிகளின்படி கடற்கரையில் இருந்து 3 கடல் மைல் தொலைவிற்குள் அத்துமீறி மீன் பிடிப்பில் ஈடுபட்டால் 3 முறை மட்டுமே எச்சரிக்கை விடப்படும். 4-வது முறை படகின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு கடந்த மாதம் மண்டபத்தில் மீனவர் ஒருவரின் படகின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்