அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட 8 மாணவர்கள் மீது வழக்கு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-08-14 22:15 GMT
தர்மபுரி,

பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோரிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சிலர் சாதி மோதலை உருவாக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோக்களில் எங்கள் தலைவரை இழிவுபடுத்தியும், சாதியை சொல்லி கொச்சைப்படுத்தியும் தகாத வார்த்தைகளால் பேசியும், பாடியும் வெளியிட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள மாணவர்களையும், இவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவிவரும் வீடியோக்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக பென்னாகரம் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இதுதொடர்பாக பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தமிழ்வேல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த பள்ளியில் படிக்கும் 8 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்