ராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சாவு கொலை வழக்காக மாற்றம்

ராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-15 22:15 GMT
ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே அளத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 64). இவருடைய மனைவி அழகம்மாள். இவர்கள் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தனர்.

இந்த பசுமாடுகளை ராஜன் அளத்தங்கரை அருகே மேய விடுவது வழக்கம். அங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை அண்ணா காலனியை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். இதற்கிடையே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் மரக்கன்றில் உள்ள இலைகளை மேய்ந்துள்ளன. இதனை கவனித்த மணிகண்டன், ராஜனிடம் சென்று பசுமாடுகளை வேறு பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பலாமே என்று கண்டித்துள்ளார். இதுதொடர்பாக மணிகண்டனுக்கும், ராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த கட்டையால் ராஜனின் தலையில் தாக்கியதாக தெரிகிறது.

சாவு

இந்த தாக்குதலில் ராஜன் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் சிகிச்சைக்கு பிறகு ராஜன் வீடு திரும்பினார். அதன் பிறகு சில நாட்களில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து வாலிபர் மீது போடப்பட்ட வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்