கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மும்முரம்-எடியூரப்பா தகவல்

கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-16 00:08 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-

மகாத்மா காந்தியின் ராமராஜ்ஜிய கனவை நிறைவேற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம். வளர்ச்சியே ஆட்சியின் மந்திரம் என்பதின் அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம். விடுதலை போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அபாரமான தியாகம் மூலம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது அனைவரின் கடமை ஆகும்.

கர்நாடகம் வறட்சி, வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது. இந்த இரண்டு பேரிடர்களையும் சந்திக்க எனது அரசு தயாராக உள்ளது. நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும், மாவட்ட கலெக்டர்களின் மாநாட்டை நடத்தி, வறட்சி குறித்து விவரங்களை பெற்றேன். இந்த விஷயத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று கலெக்டர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினேன்.

கர்நாடகம் கடந்த 45 ஆண்டுகளில் சந்திக்காத இயற்கை பேரிடரை தற்போது சந்தித்து வருகிறது. மாநிலத்தின் 50 சதவீத பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் 103 தாலுகாக்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மழை பற்றாக்குறையால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் இதுவரை 61 பேர் மரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.5 லட்சம் உடனே வழங்கியுள்ளோம். வெள்ளத்தில் சிக்கியவர்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 948 பேர் மீட்கப்பட்டனர்.

859 கால்நடைகள் இறந்துள்ளன. 51 ஆயிரத்து 460 கால்நடைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளோம். மாநிலத்தில் மொத்தம் 1,221 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 617 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4.69 லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமடைந்துவிட்டன. 58 ஆயிரத்து 620 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தேன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பாதி சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்துள்ளேன். நகர்ப்புறங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ள மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும், அதுகுறித்து மத்திய அரசிடம் மனுவாக வழங்கி நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும்.

அரசின் உயர் அதிகாரிகளை வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரிகளாக நியமித்து நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடல் அரிப்பு காரணமாக ஏராளமான மீனவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். இந்த விஷயத்தில் மீனவர்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்