இருளஞ்சேரி ஊராட்சியில் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கும் மழைநீர் பொதுமக்கள் அவதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. வரத்து கால்வாய் அடைப்பால் மழை நீர் அனைத்தும் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கிறது.

Update: 2019-08-16 22:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது புதிய இருளஞ்சேரி. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை கூவம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மழை பெய்தது. வரத்து கால்வாய் அடைப்பால் மழை நீர் அனைத்தும் சுடுகாட்டை சூழ்ந்து நிற்கிறது. இதனால் யாரேனும் இறந்தால் அவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் மழை நீர் தேங்கியுள்ளதால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்துபோனார். அவரது உடலை பொதுமக்கள் தண்ணீரில்தான் எடுத்து சென்றனர்.

அந்த சுடுகாட்டின் அருகே பெண்கள் சுகாதார வளாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் உள்ளது. அதன் முன்னரும் மழை நீர் தங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளும், பெண்களும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சுடுகாட்டில் தேங்கியுள்ள மழை நீர் செல்ல வரத்து கால்வாயை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து அடைப்பை அகற்றி அந்த சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்