குட்டையில் குப்பை கொட்ட எதிர்ப்பு, வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் - வடலூர் அருகே பரபரப்பு

வடலூர் அருகே குட்டையில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-16 22:45 GMT
வடலூர், 

வடலூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்களில் கொண்டு சென்று தென்குத்து கிராமத்தில் ஒதுக்குப்புறத்தில் உள்ள குட்டையில் கொட்டப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், ஏற்கனவே பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் கடந்த சில மாதங்களாக குட்டையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி, அந்த கிராம மக்களுக்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலையில் பேரூராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளுடன் 3 வாகனங்கள், தென்குத்து குட்டைக்கு சென்றது. இதை பார்த்து கிராம மக்கள் ஒன்று திரண்டு வந்து, அந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், இனிமேல் இந்த குட்டையில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து வாகனங் களை விடுவித்துவிட்டு, கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்