உடுமலையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது; வீட்டிற்கு சென்றபோது பேசாததால் வெறிச்செயல்

உடுமலையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு சென்றபோது அந்த பெண் பேசாததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2019-08-18 00:15 GMT
உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (வயது 24). பழனிச்சாமி இறந்து விட்டதால் சுமதியை அவருடைய பெற்றோர் கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இதனால் சுமதி தனது 2-வது கணவர் மணிகண்டனை பிரிந்து, குழந்தையை தூக்கிக்கொண்டு உடுமலை ஜெ.ஜெ.நகரில் உள்ள தாய் மல்லிகா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சுமதி அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான திருமலைச்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திருமலைச்சாமியும், இவருடைய உறவினர் கணேஷ் (24) என்பவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். இதையடுத்து திருமலைச்சாமி வீட்டிற்கு கணேஷ் அடிக்கடி வந்து சென்றார்.

இதனால் கணேசுக்கும், சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த பழக்கத்தில் சுமதிக்கு செல்போன் ஒன்றை கணேஷ் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான இந்த பழக்கம் சுமதியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சுமதியிடம் இருந்த செல்போனை வாங்கி கணேசிடம் கொடுத்துவிட்டு இனிமேல் கணேசிடம், பேசவோ, பழகவோ கூடாது என்று சுமதிக்கு அவருடைய உறவினர்கள் அறிவுரை கூறியுள்ளனர். அதன்பின்னர் கணேசுடன் சுமதி பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை திருமலைச்சாமி வேலைக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் சுமதி இருந்துள்ளார். அப்போது சுமதியின் வீட்டிற்கு வந்த கணேசிடம் சுமதி பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அரிவாளால் சுமதியின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசில் திருமலைச்சாமி புகார் செய்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (உடுமலை பொறுப்பு) ராஜா கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவி, சையத் இசேக் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் கான அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்