காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-17 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்பையா என்கிற சுப்பையா (வயது 65). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (50) என்பவரும் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை அங்கு வந்தது. அந்த யானையை கண்டதும் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் யானை 2 பேரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் நாகராஜ் காயத்துடன் தப்பி ஓடி விட்டார். அப்பையாவால் ஓட முடியாமல் கீழே விழுந்தார். அப்போது விரட்டி வந்த யானை அவரை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது.

இதற்கிடையே யானை தாக்கி அப்பையா பலியான தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் யானை காட்டுக்குள் சென்றது. அப்பையாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் சிலர் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் அவர்கள் அய்யூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா மைய விடுதிக்கு சென்றனர். அங்கிருந்த நாற்காலி, மேசைகள் ஆகியவற்றை சூறையாடினர். மேலும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். மேலும் அந்த இடத்தில் இருந்த ஆவணங்களையும் கிழித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே போலீசாரும் வரும் தகவல் அறிந்து வனத்துறை விடுதியை சூறையாடிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள், இறந்து போன அப்பையாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் உடலை அங்கிருந்து கொண்டு செல்லவிடமாட்டோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்றனர். கொட்டும் மழையில் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து பலியான அப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அய்யூர் வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா விடுதியை சூறையாடியதில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அய்யூர் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே யானை தாக்கி பலியான அப்பையா வின் குடும்பத்திற்கு முதல் கட்ட உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வனத்துறையினர் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்