நாற்றுநடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள் - தொளசம்பட்டி அருகே பரபரப்பு

தொளசம்பட்டி அருகே ரெயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி சுரங்க பாலத்தில் தேங்கி நின்ற மழைநீரில், பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-17 22:20 GMT
ஓமலூர்,

சேலம்-மேட்டூர் இடையிலான ரெயில் பாதையில் தொளசம்பட்டி அருகே மேம்பாலம் கட்டும் பணி நடந்தது. இந்த பணி கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மாநில அரசு சார்பில் இந்த மேம்பாலத்துக்கு இணைப்பு பாலம் அமைக்கப்பட வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக இந்த பணி நடைபெறவில்லை.

அதே நேரத்தில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு விட்டதால், அதன் அடியில் இருந்த ரெயில்வே கேட்டை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் பூட்டி விட்டது. இதனால் தொளசம்பட்டி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், அமரகுந்தி ஆகிய பகுதிகளுக்கு சென்று வர அந்த பகுதி மக்கள் தொளசம்பட்டி ரெயில்வே கேட் அருகே உள்ள குறுகிய சுரங்க பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்று வருகின்றனர்.

மேலும் இந்த சுரங்க பாலத்திற்கு பட்டா நிலத்தின் வழியாக தான் சென்று வர வேண்டும். அதே நேரத்தில் ரெயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வராததால், கனரக வாகனங்கள் சுரங்க பாலத்தின் வழியாகவும் செல்ல முடியாது என்பதால் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு சுற்றி செல்லும் நிலை கடந்த ஒரு ஆண்டாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. இதனால் சுரங்க பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மழைநீர் நிரம்பி சேறும், சகதியுமாக உள்ளது. எனவே இந்த பாதையில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் அதிருப்தி அடைந்த இந்த பகுதி பொதுமக்கள், கட்டி முடிக்கப்பட்ட ரெயில்வே மேம்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுரங்க ரெயில்வே பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக காட்சி அளித்த இடத்தில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறும் வரை, ரெயில்வே கேட்டை தற்காலிகமாக திறந்து வைக்க ரெயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்