வடபழனியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது: 32 பவுன் நகைகள் பறிமுதல்

வடபழனியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 32 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-08-18 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வடபழனி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து அடிக்கடி திருட்டுகள் நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பகல் நேரத்தில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் நுழைய முயன்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டினர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபரின் உருவத்தை வைத்து, சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், தலைமைக் காவலர் ராஜ்மோகன், அசோக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் வடபழனியில் பட்டப்பகலில் வீடுகளில் திருடி வந்தது, தியாகராயநகர் துக்காராம் 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் (வயது 25) என்பது தெரியவந்தது. தியாகராயநகரில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைதான கார்த்திக், வடபழனி, அசோக்நகர், பாண்டிபஜார், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கூட்டாளிகள் யாரையும் சேர்த்துக்கொள்வது இல்லை. போலீசாரிடம் கூட்டாளிகள் சிக்கிக்கொண்டால் தானும் மாட்டிக்கொள்வோம் என்பதால் கூட்டாளிகளை சேர்க்காமல் தனியாக சென்று திருடி வந்து உள்ளார்.

போலீசிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க ஒரு வீட்டில் கொள்ளையடித்த உடன், அந்த பணத்தை கொண்டு ஊட்டி, கொடைக்கானல், கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இன்ப சுற்றுலா சென்றுவிடுவார். கையில் பணம் தீர்ந்துவிட்டால் மீண்டும் சென்னை வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் கைதாகி சிறை சென்றவர், பின்னர் வெளியே வந்ததும் மீண்டும் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. கார்த்திக்கிடம் இருந்து 32 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்