ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வாகனம்

ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் வாகனத்தின் சேவையை மாநகராட்சி அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Update: 2019-08-18 22:45 GMT
மதுரை,

மதுரை நகரில் சேரும் குப்பைகளை வீடு, வீடாக சென்று பெறும் திட்டம் மாநகராட்சியால் செயல்படுத்தப்படுகிறது. சந்துகளில் செல்லும் அளவிற்கு பேட்டரி வாகனங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. இந்தநிலையில் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் வாகனத்தை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. ஒரு வாகனம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மொத்தம் 99 வாகனங்கள் ரூ.5 கோடியே 54 லட்சத்து 40 ஆயிரம் செலவில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

மதுரையை தூய்மையான மாநகராக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. 100 வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்காக புதிய இலகுரக வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனம் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு கொடுத்தப்படியே வீடு, வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெறும். மதுரை மாநகரை பிளாஸ்டிக் இல்லா மாநகராகவும், தூய்மையான மாநகராகவும் மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். நம்முடைய அடுத்த சந்ததிகள் நோய் இல்லாமல் வாழ்வதற்கும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்