ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம், வீடுகள் கட்டி தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வீடுகள் கட்டி தரக்கோரி ஊட்டி நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2019-08-19 22:30 GMT
ஊட்டி,

ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி குந்தா பிக்கட்டி பகுதி மக்கள் வீடுகள் கட்டி தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிக்கட்டி, ஒசட்டி, குந்தா கோத்தகிரி ஆகிய கிராமங்களில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த வாரம் பெய்த கனமழையால் நாங்கள் வேலைக்கு செல்ல இயலவில்லை. எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. 10 குடும்பத்தினர் சதுப்பு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். கனமழையால் அந்த வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து உள்ளது. இதனால் நாங்கள் தங்க இட இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். இதுகுறித்து மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. வருவாய் துறையினர் வீடுகளை அந்த காலி செய்யவும், வேறு இடத்தில் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீடுகள் கட்டி தர ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சமூக நீதிக்கான அனைத்து தொழிலாளர் அமைப்பின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மற்றும் பொதுக்கள் அளித்த மனுவில், கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பெட்டட்டி அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் எந்த ஆதரவு இல்லாத வயதானவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது முதிர்வு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருக்கிறோம். 60 வயதை கடந்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை. அதனால் மருத்துவ செலவு, உணவிற்கு அவதி அடைந்து வருகிறோம். ஆகவே அரசு மூலம் வயதானவர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஊட்டி அருகே பில்லிக்கம்பை கிராம மக்கள் இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பில்லிக்கம்பையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதி வழியாக சென்று வருகிறார்கள். மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை சாலைகளில் வீசி எறிவது, தகாத வார்த்தைகளில் பேசுவது போன்றவற்றில் மதுபிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதி அடைகின்றனர். மதுக்கடையை அகற்றக்கோரி மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மதுக்கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் ஒன்றிணைந்து மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கட்டபெட்டு பகுதியில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நீலகிரி தொகுதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ் அளித்த மனுவில், பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் கூடலுரில் இருந்து சிறியூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு சாலை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலுர், பந்தலூர் பகுதிகளில் உள்ள நீர்நிலை வழித்தடங்களான ஓடைகள், ஆறுகளில் உள்ள ஆக்கிரப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்