திருடப்பட்ட பயிர் காப்பீடு பணத்தை மீட்டுதாருங்கள்; கலெக்டரிடம், மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை

பக்கத்து வீட்டு வாலிபரால் திருடப்பட்ட தனது பயிர் காப்பீடு பணத்தை மீட்டுத்தாருங்கள் என்று கலெக்டரிடம் மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Update: 2019-08-19 23:00 GMT
ராமநாதபுரம்,

கமுதி அருகே உள்ள அபிராமம் சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவரெத்தினம்(வயது 75). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கலெக்டர் வீரராகவ ராவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் பூ வியாபாரம் செய்து பிழைத்து வருகிறேன். எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் இல்லாமல் போனதால் அரசு ரூ.1 லட்சம் பயிர்காப்பீடு தொகை வழங்கியது. இந்த பணம் மற்றும் நான் சேர்த்து வைத்திருந்த ரூ.10,000 ஆகியவற்றை பீரோவில் வைத்திருந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி அதிகாலை தூங்கி எழுந்து வெளியில் வந்தபோது பக்கத்துவீட்டில் வசிக்கும் செல்வம் என்பவர் என்னை தள்ளிவிட்டு வீட்டிற்குள் சென்று பீரோவில் வைத்திருந்த பணத்தினை திருடிக்கொண்டு சென்றுவிட்டான். இதுகுறித்து அபிராமம் மற்றும் கோட்டைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் பலனில்லை. கலெக்டர் அலுவலகத்தில் 4 முறை மனுகொடுத்துள்ளேன். கணவனை பிரிந்து தனியாக வாழும் எனக்கு அரசு வழங்கிய இந்த பணம்தான் வாழ்வாதாரம். இதனை உடனடியாக விசாரித்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்ததால் அது மீதான நடவடிக்கை குறித்து கலெக்டர் வீரராகவராவ் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்ததோடு, மனு மீது நடவடிக்கை எடுக்காததற்கு போலீசாரை கண்டித்தார். மேலும் இதுகுறித்து கமுதி துணை போலீஸ் சூப்பிரண்டை செல்போனில் அழைத்த கலெக்டர் வீரராகவ ராவ் மூதாட்டியின் மனு மீது உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்து பணத்தினை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்