குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பரிசளிப்பு

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருமானூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

Update: 2019-08-19 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் திருமானூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்தார். 12 மேல்நிலைப்பள்ளிகள், 20 உயர்நிலைப்பள்ளிகள், 22 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 54 பள்ளிகளிலிருந்து மொத்தம் 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளாக மாணவ- மாணவிகள் இருவருக்கும் தனிதனியே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எரிதல், குண்டு எரிதல், 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்பட 47 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பரிசு வழங்கப்படும். விளையாட்டு போட்டிக்கு திருமானூர் குறுவட்ட செயலாளர் அக்பர்கான் தலைமை தாங்கினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் வில்லாலன், அருண்மொழி, செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டியின் போது உயரம் தாண்டுதல் போட்டியில் மாணவர்கள் தாண்டும்போது பயன்படுத்தும் ‘மேட்’ ஆனது கிழிந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கை, கால் உடைய வாய்ப்புள்ளது. எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன் அதனை மாற்ற வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்