அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.9¼ லட்சம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.9¼ லட்சம் மோசடி செய்த 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் பெண் அளித்துள்ளார்.

Update: 2019-08-19 22:00 GMT
வேலூர், 

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தீபிகா (வயது 35). இவர், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு எனது நண்பர் மூலமாக குடியாத்தம் அருகே உள்ள வெங்கடேச புரத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் 3 பேரும் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், பணம் கொடுத்தால் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் கூறினர்.

அதனை நம்பி முதற்கட்டமாக அவர்களிடம் ரூ.3 லட்சம் கொடுத்தேன். பின்னர் அவர்களின் வங்கிக்கணக்கு மற்றும் நேரில் சென்று பல்வேறு தவணைகளில் ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி இதுவரை வேலை வாங்கி தரவில்லை.

எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி மோசடி செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, நான் கொடுத்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

மேலும் செய்திகள்