கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், ஓய்வூதியர்களுக்கு மருத்துவ செலவுத்தொகை - கலெக்டர் அன்புசெல்வன் வழங்கினார்

கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் மருத்துவ செலவுத்தொகையை வழங்கினார்.

Update: 2019-08-19 22:45 GMT
கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 201 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் 4 ஓய்வூதியதாரர்களுக்கு இன்சூரன்சு நிறுவனம் மூலம் வரப்பெற்ற மருத்துவச் செலவுத்தொகை 1 லட்சத்து 79 ஆயிரத்து 597 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மேலும் கூட்டத்தில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருப்பஞ்சாவடியை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிவேல் கொடுத்த மனுவில், கொளக்குடி பாதிரிமேடு கிராமத்தை சேர்ந்த ஒருநபர் எனக்கு சிங்கப்பூரில் ‘சூப்பர் வைசர்’ வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் வாங்கினார். அதன்படி என்னை சிங்கப்பூருக்கு அனுப்பிய அவர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கிணறு வெட்டும் வேலைக்கு அனுப்பினார். இதனால் நான் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டேன். எனவே எனது பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகள் திருமாறன், திருமார்பன் ஆகியோர் தலைமையில் சாத்துக்கூடலை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடலில் கடந்த 1991-ம் ஆண்டு 93 குடும்பங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. ஆனால் 28 ஆண்டுகளாகியும் அந்த வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே எங்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேகர் முன்னிலையில் தொழிலாளர் வாழ்வுரிமை சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கடலூர் சிப்காட்டில் உள்ள 2 தனியார் தொழிற்சாலைகள் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக்கூட தர மறுக்கிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்த முயன்றோம். ஆனால் கம்பெனி நிர்வாகத்துடன் காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு எங்களை போராட்டம் நடத்த முடியாத அளவுக்கு தடுக்கிறார்கள். எனவே எங்கள் போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல், தனித்துணை ஆட்சியர் பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்