குவாரியில் இருந்து கற்களை ஏற்றிச்செல்லும்போது 200 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

பல்லடம் அருகே 200 அடி பள்ளத்தில் இருந்து லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார்.

Update: 2019-08-20 22:45 GMT
பல்லடம்,

ஒடிசா மாநிலம் ஜெய்சிங்பூர் அடங்காமஞ்சுரை சேர்ந்த திவாஜ்பார் மாலிக் மகன் திலிப் மாலிக் (வயது 43). இவருக்கு அஞ்சனாமாலிக் (38) என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திலிப் மாலிக் கடந்த 6 வருடங்களாக பல்லடம் அருகே உள்ள கோடங்கிப்பாளையத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்குவாரியில் இருந்து லாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு, லாரியை திலிப் மாலிக் ஓட்டிச்சென்றார்.

குவாரியில் இருந்து 200 அடி உயரத்தில் லாரி சென்று கொண்டிருக்கும் போது லாரியில் உள்ள சென்ட்ரல் ஆக்சல் உடைந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, 200 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திலிப் மாலிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி சுக்கல்நூறாக உடைந்து சிதறியது. இதுகுறித்து திலிப் மாலிக்கின் உறவினர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலிப் மாலிக் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதபரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவரது சொந்த ஊரான ஒடிசா மாநிலம் ஜெய்சிங்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்