வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி: வாக்குச்சாவடி முகவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் வாக்குச்சாவடி முகவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2019-08-20 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் வாக்காளர் விவரங்கள் சரிபார்த்தல், வாக்காளர்களின் இருப்பிடம் மற்றும் தகவல் தொடர்பு விவரங்களை சரிபார்த்தல், வாக்குச்சாவடிகளின் அமைவிடங்கள் மற்றும் மாற்றுதல் தொடர்பான விவரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல்களை மேம்படுத்துதல் ஆகியவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பெயர் சரிபார்த்தல்

பின்னர் கலெக்டர் ஆனந்த், நிருபர்களிடம் கூறியதாவது:-

2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம்-2020 நடைபெறவுள்ளது. இதில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களை சரிபார்த்தல், திருத்தம் செய்தல், இறப்பு மற்றும் குடிபெயர்த்தவர்களின் பெயர்களை நீக்குதல் போன்ற பணிகளை வாக்காளர்களே செய்து கொள்ள தேர்தல் ஆணையம் வழிவகைகளை பிறப்பித்து நடைமுறைப்படுத்திட உள்ளது.

சரி பார்க்கும் பணி

வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பட்டியல் தொடர்பான சுய விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்களை வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வாக்காளர் உதவி மைய மொபைல் செயலி “ www.nvsp.in ” இணையதளம், தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையம், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை ஆகியவைகள் மூலம் வாக்காளர் விவரங்களை சரிபார்க்கலாம்.

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி முதல் 30-ந் தேதி முடிய வீடு-வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.

அடையாள அட்டை

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மத்திய, மாநில அரசு அல்லது அரசு சார்பு நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய ஆவணங்களில்் ஏதேனும் ஒரு ஆவணத்தின் நகலை வாக்காளர்கள் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் முருகதாஸ், புண்ணியகோட்டி, கலெக்டர் நேர்முக உதவியாளா பூஷ்ணகுமார், தனி தாசில்தார் (தேர்தல்) சொக்கநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்