உலக தாய்ப்பால் வாரவிழாவில் ‘கொழுகொழு’ குழந்தைகளுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்

திண்டுக்கல்லில் நடந்த உலக தாய்ப்பால் வாரவிழாவில் கொழுகொழு குழந்தைகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

Update: 2019-08-20 22:45 GMT
திண்டுக்கல்,

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை வலியுறுத்தி, உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் உலக தாய்ப்பால் வாரவிழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது தாய்ப்பால் விழிப்புணர்வு தொடர்பான சுவர் ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் கொழுகொழு குழந்தைகளுக்கான போட்டியும் நடத்தப்பட்டது. இதில் தாய்ப்பால் வழங்கப்பட்டு கொழுகொழுவென இருந்த குழந்தைகளை தேர்வு செய்து கலெக்டர் பரிசு வழங்கினார். முன்னதாக உணவு கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போன்று வேறு சிறந்த இயற்கை உணவு எதுவும் இல்லை. பச்சிளம் குழந்தைகளின் சீரான உடல்வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு தாய்ப்பால் தான் அடிப்படையாக அமைகிறது. எனவே, தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதன்பின்னர் இணை உணவுகளை கொடுக்கலாம்.

அதேபோல் ஒருசில தாய்மார்களுக்கு போதிய அளவு தாய்ப்பால் இல்லாமல் போய்விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு முன்னோடி திட்டமாக தாய்ப்பால் வங்கி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தாய்ப்பால் வங்கி குறித்து தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் தாய்மார்கள் தங்களுடைய நலனையும், குழந்தைகளின் நலனையும் பேணி காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்