நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் கலெக்டர் தகவல்

நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-20 23:00 GMT
அரியலூர்,

விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து, குறித்த காலத்தே பண்ணைப்பயிர் சாகுபடி செய்திட ஏதுவாகவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திடவும் வேளாண்மையை எந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டம் தமிழகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பெருமளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2019-20-ம் நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் ரூ.2 கோடியே 92 லட்சத்து 75 ஆயிரம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் தங்களது விபரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து, மத்திய அரசின் இணையத்தளமான www.agrimachinery.nic.in மூலம் வழிமுறைகளின்படி மானியம் பெற்று வருகின்றனர். அதன்படி விவசாயிகளுக்கு அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சமும், நெல் நாற்று நடவு செய்யும் எந்திரங்களுக்கு ரூ.5 லட்சமும், வைக்கோல் கட்டும் எந்திரங்களுக்கு ரூ.9 லட்சமும், அறுவடை எந்திரங்களுக்கு ரூ.11 லட்சமும் மானியமாக நடப்பு 2019-20-ம் ஆண்டு வழங்கப்பட உள்ளது.

ஒதுக்கீடு

வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 40 டிராக்டர்கள், 69 பவர்டில்லர்கள், 5 நெல் நாற்று நடவு செய்யும் எந்திரங்கள், 3 நெல் அறுவடை எந்திரங்கள், 2 வைக்கோல் கட்டு கட்டும் கருவிகள் உள்பட பல்வேறு கருவி வாங்கி கொள்ள நடப்பாண்டில் ரூ.2 கோடியே 92 லட்சத்து 75 ஆயிரமும், 5 வாடகை மையங்கள் அமைக்க ரூ.50 லட்சமும் இம்மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் நெடுமாறனை 9443399525 என்ற தொலை பேசி எண்ணிலோ அல்லது ஜெயங்கொண்டம் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் இளவரசனை 9442112969 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்