திருமண மண்டபங்களில் புகுந்து நகை, பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

திருமண மண்டபங்களில் புகுந்து நகை-பணம் திருடிய 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-08-20 22:30 GMT
கோவை,

கோவை காட்டூர், ரத்தினபுரி, ஆர்.எஸ்.புரம், போத்தனூர், வெரைட்டிஹால் ரோடு, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்களில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை அவ்வப்போது நகை, பணம் திருட்டு போனது. இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சரவணன் (வயது 29), நெல்லை மாவட்டம் தென்காசி திப்பம்பட்டியை சேர்ந்த வைத்தியலிங்கம் (28) ஆகியோர் டிப்-டாப்பாக உடை அணிந்து திருமண மண்டபங்களில் புகுந்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி காட்டூர் போலீசார் சரவணன், வைத்தியலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த வினோத் (31) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 151 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் 3 பேர் மீதும் கோவை மாநகர பகுதியில் மட்டும் 9 வழக்குகள் உள்ளன. இது தொடர்பாக கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி காட்டூர் மற்றும் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் உள்ள 3 வழக்குகளில் சரவணன், வைத்தியலிங்கம் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், நகையை வாங்கிய வினோத்துக்கு தலா ஒரு ஆண்டு சிறை, தலா ரூ.1000 அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்