தாய்க்கு கோவில் கட்டி வழிபட்டு வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

திருக்காட்டுப்பள்ளி அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தனது தாய்க்கு கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.

Update: 2019-08-21 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தாயிற்சிறந்த கோவிலும் இல்லை... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது தாய்க்கு சிலை வைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.

அதைப்பற்றி இங்கே பார்ப்போமா!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கல்லணைக்கால்வாய் கரையோரம் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினசாமி. இவருடைய மனைவி சாரதா. இவர்களுடைய மகன் சத்தியமூர்த்தி(வயது 65). இவர் தணிக்கைத்துறையில் ஆடிட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சிறு வயதாக இருக்கும்போதே அவருடைய தந்தை இறந்து விட்டார். இதனால் தாயார் சாரதா மிகவும் கஷ்டப்பட்டு சத்தியமூர்த்தியை கல்லூரி வரையில் படிக்க வைத்தார்.

தாய்க்கு கோவில்

கடந்த 1996-ம் ஆண்டு சாரதா இறந்து விட்டார். இதனைத்தொடர்ந்து அவர் வாழ்ந்து வந்த இடத்தில் 5 சென்ட் நிலத்தை தான் படித்த நாச்சியார்பட்டி தொடக்கப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக சத்தியமூர்த்தி இலவசமாக கொடுத்தார். அதன் அருகே கடந்த 2010-ம் ஆண்டு ரூ.3 லட்சம் செலவில் தனது தாய்க்கு சிலை வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். அன்று முதல் தினமும் தனது தாய் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டு வருகிறார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி கூறுகையில், என்னுடன் பிறந்தவர்கள் 4 பேர். இதில் நான் மட்டுமே உள்ளேன். மற்றவர்கள் இறந்து விட்டனர். எனக்கு குழந்தைகள் இல்லை. என்னை கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்த தாயாருக்கு சிலை வைத்து கோவில் கட்ட முடிவு செய்தேன். எங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்தேன். மீதமிருந்த இடத்தில் எனது தாயார் சிலை வைத்து கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன் என்றார்.

வயதான பெற்றோர்களுக்காக முதியோர் இ்ல்லத்தை தேடும் பிள்ளைகள் பெருகி வரும் நிலையில் தன்னை பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வழிபட்டு வரும் சத்தியமூர்த்தியை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்