கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி வாலிபர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-21 22:45 GMT
உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மல்லிகாபுரம் குட்டக்கரையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). இவர் குடும்பத்திற்கும் அவரது பெரியப்பாவான ராயப்பன் (50), என்பவரது குடும்பத்திற்கும் சொத்துத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி மாலை அருண்குமார் மல்லிகாபுரம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ராயப்பனின் 2-வது மகன் பிரதாப் (20), என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக அருண்குமாரை மோதுவது போல வந்துள்ளார். ஏன் இப்படி வருகிறாய் என்று அவர் கேட்டதற்கு பிரதாப் கேலிசெய்துவிட்டு போனதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அருண்குமார் பிரதாப் வீட்டுக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது பிரதாப்பின் அண்ணன் பிரபாகரன் (27), அவரது தாய் ஜெசிந்தா (45), செல்வம் ஆகியோர் அருண்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருண்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதாப் மற்றும் செல்வம் ஆகியோரை கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் பிரபாகரன் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அருண்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் மல்லிகாபுரம் கொண்டுவரப்பட்ட அருண்குமாரின் உடலை அவரது உறவினர்கள் உத்திரமேரூர்- காஞ்சீபுரம் சாலையில் வைத்து பிரபாகரன் மற்றும் அவரது தாயார் ஜெசிந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் மற்றும் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரைபாண்டியன் மற்றும் போலீசார் அருண்குமாரின் உறவினர்களிடம் பிரபாகரன் மற்றும் ஜெசிந்தா இருவரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரணடைந்து உள்ளார்கள். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே சாலை மறியலை கைவிடுங்கள் என்று கேட்டுகொண்டார். இதையடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்