காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கு: போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை

பெரம்பலூர் அருகே காதல் பிரச்சினையில் நடந்த கொலை வழக்கில் இருந்து போலீஸ் முன்னாள் உதவி கமிஷனர் உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2019-08-21 22:15 GMT
திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூரை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 1995-ம் ஆண்டு மர்மமான முறையில் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் பிணமாக தொங்கினார். காதல் பிரச்சினையில் அவரை போலீஸ் ஒத்துழைப்புடன் சிலர் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக பாண்டியனின் மனைவி அஞ்சலை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவுபடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக சம்பவம் நடந்த போது பாடாலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சி.கே.காந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு சின்னத்துரை மற்றும் வேப்பூரை சேர்ந்த சீமான், அவருடைய அண்ணன் சுப்பிரமணி, பாலசுப்பிரமணியன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை முடிவில் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்த அஞ்சலை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் சி.கே.காந்தி உள்பட 6 பேர் மீதும் கடந்த 2013-ம் ஆண்டு கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. சி.பி.ஐ. தரப்பில் 6 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சி.கே.காந்தி திருச்சி மாநகர் கண்டோன்மெண்ட் சரக போலீஸ் உதவி கமிஷனராக இருந்தார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது பதவி உயர்வு, பணி ஓய்வு போன்றவையும் பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சி.கே.காந்தி உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்