பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு

பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-21 23:00 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ரமேஷ், ரவி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ரமேஷ் வெளியூரில் தங்கியிருந்து ஆசிரியராகவும், ரவி தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் ராமசாமியும், மலர்கொடியும் பாடாலூர் கிராமத்தில் இருந்து, ஊட்டத்தூர் செல்லும் சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கநிகழ்விற்கு செல்வதற்காக ராமசாமியும், மலர்கொடியும் வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

நகை-பணம் திருட்டு

பின்னர் அவர்கள் நேற்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் முன்னால் போடப்பட்டிருந்த இரும்பு கேட்டின் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகையும், ரூ.15 ஆயிரமும் திருடுபோயிருந்தது.

இது குறித்து ராமசாமி பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்