தொழில் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற மானியம் - கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Update: 2019-08-21 22:30 GMT
நெல்லை, 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டி தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக அந்த நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ.9000, ஐ.எஸ்.ஓ.1401, ஐ.எஸ்.ஓ.22000, எச்.ஏ.சி.சி.பி., ஜி.எம்.பி., ஜி.எச்.பி. உள்ளிட்ட சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற செலுத்தும் கட்டணத்தில் ஒவ்வொரு சான்றிதழுக்கும் “கியூ சான்றிதழ்“ என்ற புதிய திட்டத்தின் கீழ் 100 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை) மானியமாக வழங்க தமிழக அரசினால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் “கியூ சான்றிதழ்“ என்ற புதிய திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ.9000, ஐ.எஸ்.ஓ.1401, ஐ.எஸ்.ஓ.22000, எச்.ஏ.சி.சி.பி., ஜி.எம்.பி., ஜி.எச்.பி. தரச்சான்றிதழ்கள் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற்ற தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடைய தொழில் நிறுவனங்கள், ஒவ்வொரு கிளைக்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

நெல்லை மாவட்டத்தில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட தரச்சான்றிதழ்கள் பெற செலவழித்த கட்டண தொகையில் (பயண செலவு, தங்குமிடம், உணவு மற்றும் கண்காணிப்பு செலவு தவிர்த்து) 100 சதவீதம் தமிழக அரசினால் மானியமாக வழங்கப்படும்.

இந்த தரச்சான்றிதழ்கள் பெறுவதால் நெல்லை மாவட்டத்தில் இயங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தரம் மேம்படுத்தப்படும், தரமான பொருட்களின் தேவை அதிகரிப்பதால் உற்பத்தி அதிகரிக்கும், வளம் பெருகி தொழில் விரிவாக்கம் ஏற்படும், மேலும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு பாளையங்கோட்டை புனித தாமஸ் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 0462- 2572162, 2572384 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்