க.பரமத்தி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு தேசிய விருது

க.பரமத்தி அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

Update: 2019-08-21 22:45 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள மோளபாளையம் என்னும் சிற்றூரில் ராக்கப்பகவுண்டர்-லட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆர்.செல்வகண்ணன் (வயது 54). இவர் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மோளபாளையம் அரசு தொடக்கப்பள்ளியிலும், 6-ம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை க.பரமத்தி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பிளஸ்-1, பிளஸ்-2 சின்னதாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் படித்து முடித்தார். தொடர்ந்து 1988-90-ம் ஆண்டு மாயனூர் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஆசிரியர் படிப்பை முடித்தார். பின்னர் 1995-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் க.பரமத்தி அருகே உள்ள ஆலாம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

14 ஆண்டுகள்

பின்னர் 2000-ம் ஆண்டு கூடலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். 2002-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று குஞ்சாம்பட்டி தொடக்கப் பள்ளிக்கு சென்றார். தொடர்ந்து 2005-ம் ஆண்டு பணி மாறுதல் பெற்று க.பரமத்தி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 14 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ஆசிரியரின் பள்ளி கட்டமைப்பு வசதி, மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், சமுதாயத்தின் மூலம் பள்ளியில் பங்களிப்பு, பள்ளியின் கல்வித் தரம் உயர்த்த பாடுபட்டுள்ளார். மேலும் க.பரமத்தி அரசு தொடக்கப்பள்ளியை தனியார் பள்ளிக்கு இணையாகவும் நடத்தி வருகிறார். இதனால் அவருக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதியிடம்...

மத்திய அரசு 2018-ம் ஆண்டு வரை மாநிலத்திற்கு 22 விருதும், மத்திய அளவில் 320 விருதும் கொடுத்து வந்தனர். தற்போது மத்திய அளவில் மொத்தம் 45 விருதுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் ஆசிரியர்களை தேர்வு செய்து 32 மாவட்டத்தில் இருந்து தலா 3 பேர் வீதம் 96 பேரை தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் உள்ள மனிதவள மேம்பாட்டு துறைக்கு தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. இதில் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் அனைத்து மாநிலத்திலும் சேர்த்து 45 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தமிழகத்தில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் ஒருவர் க.பரமத்தி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.செல்வகண்ணன் ஆவார். இவர் வருகிற 2-ந்தேதி ஜனாதிபதியிடம் விருது வாங்க உள்ளார். விருது வாங்க உள்ள பள்ளி தலைமையாசிரியருக்கு கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்