சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க ‘இ-சலான்’ கருவி அறிமுகம்

விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க ‘இ-சலான்’ கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-08-22 22:15 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் இனி சாலை விதிகளை மீறுபவர்களிடம் இருந்து போலீசார், அபராத தொகையை கையில் வாங்காமல் ‘இ-சலான்’ கருவியின் மூலம் அபராதம் வசூலிக்கப்படும்.

இதற்கான கருவியை விழுப்புரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிமுகம் செய்து வைத்து ‘இ-சலான்’ மூலம் எப்படி அபராத தொகை வசூலிக்க வேண்டும் என்று போலீசாருக்கு விளக்கம் அளித்தார். அதன் பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராத தொகை ஏ.டி.எம். கார்டு மூலம் பெறப்படும். ஏ.டி.எம். கார்டு இல்லாதவர்கள் ‘இ-சலான்’ ரசீதை பெற்று அருகில் உள்ள இ-சேவை மையம், தபால் நிலையம், ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் செலுத்த வேண்டும். அபராத தொகை செலுத்தாதவர்களின் விவரம் ஆன்-லைனில் நிலுவையில் இருக்கும். தொடர்ந்து 3 முறைக்கு மேல் அபராத தொகை செலுத்தாத வாகனங்கள் காவல்துறை மூலம் பறிமுதல் செய்யப்படும்.

இந்த கருவியின் மூலம் வாகன பதிவு எண்ணை பதிவு செய்யும்போது வாகன உரிமையாளரின் முகவரி, காப்பீடு விவரம் அனைத்தும் தெரியவரும். ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் அவருடைய புகைப்படம் மற்றும் விவரங்கள் தெரியவரும். இதன் மூலம் வாகனம் யாருக்கு சொந்தமானது என்பதும் தெரிந்துவிடும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 7 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் என 40 பேருக்கு இந்த கருவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் ‘ஹெல்மெட்’ இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இது விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும்போது விழுப்புரம் மாவட்டத்திலும் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அதிக ஒலி எழுப்புதல், பிரகாசமான ஒளியுடன் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் உள்ளிட்ட 77 குற்றங்களுக்கு இந்த கருவி மூலம் அபராதம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்